/ SOCIAL MEDIA

பொதுத்தன்மைகள் நிறைந்த நபர்களை நண்பர்களாக்க facebook புதிய சோதனை

Facebook test on making new friends who have mutual tastes.

பயனர்கள் இடையே தொடர்பினை விரிவுபடுத்தும் வகையில் புதிய முயற்சியினை ஃபேஸ்புக் தொடங்கியுள்ளது. பொதுவானவை (things in common) என்ற இத்திட்டத்தின்படி, ஒரு பயனருக்கும் அவருடைய நட்புவட்டத்தில் இல்லாத மற்றொரு பயனருக்கும் பொதுவான சில கூறுகளை முன்வைத்து நட்புக் கோரிக்கை விடுக்கப் பரிந்துரைக்கப்படும். எடுத்துக்காட்டாக, தங்களது நிறுவனத்தில் உள்ள ஒருவரோடு நீங்கள் இன்னும் ஃபேஸ்புக்கில் நண்பராகவில்லை எனின், இருவருக்கும் பொதுவான கூறாக உள்ள ‘ஒரே நிறுவனம்/அலுவலகம்’ என்பதை மேற்காட்டி நண்பராக்க முனையும்.

இதனைத் தற்போது அமெரிக்காவில் தேர்ந்தெடுத்த சில பயனர்களிடையே ஃபேஸ்புக் சோதனை செய்து வருவதாக சிநெட் செய்தி வெளியிட்டுள்ளது. எப்போது இது அனைத்துப் பயனர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஊர், ஃபேஸ்புக்கில் உள்ள குழுக்கள், கல்லூரி, அலுவலகம் போன்ற கூறுகளின் பொதுத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு பயனர்கள் இடையே நட்பு வட்டத்தை விரிவுபடுத்த ஃபேஸ்புக் எண்ணியுள்ளது. வெளிப்படையாக (public) ஒருவர் அறிவித்த இத்தகைய கூறுகளே இதில் கணக்கில் கொள்ளப்படும். அந்தரங்கத் தகவல்கள் எதுவும் பயன்படுத்தப்படமாட்டது.

ஒரு தயாரிப்பின் ஃபேஸ்புக் பக்கத்தில் உலவிக் கொண்டிருக்கும்போது, பதிவுகளின் கீழ் நூற்றுக்கணக்கானோரின் கமெண்ட்கள் காணப்படும். இப்புதிய திட்டத்தின்படி அத்தகைய கமெண்ட்கள் இட்டோரின் பெயரோடு உங்களுக்கு உள்ள பொதுவான கூறுகளும் காட்டப்படும். ஆகவே ஒரு பதிவின் கீழ் உங்களுடைய அலுவலகத்தில் பணிபுரிபவர் கமெண்ட் செய்திருந்தால், அத்தகவல் உங்களுக்குக் காட்டப்படும். இதனால் பொதுத்தன்மைகள் நிறைந்தவர்களுடன் நமது நட்பு வட்டத்தை விரிவுபடுத்த முடியும்.

அனைவரும் பார்க்கக் கூடிய வகையிலான இடுகைகளிலும், அனைவருக்கும் காட்டலாம் என அனுமதி அளித்துள்ள தகவல்களைக் கொண்டும் மட்டுமே இப்புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என ஃபேஸ்புக் செய்தித்தொடர்பாளர் உறுதியளித்துள்ளார். இதனால் போலிக் கணக்குகளைக் கண்டறிய முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.